ஆம்னி பஸ் மோதி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து

ஆம்னி பஸ் மோதி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

Update: 2023-02-05 19:15 GMT

மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக 10 நபர்கள் ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். வேனை மதுரை திருநகர் 3-வது ஸ்டாப்பை சேர்ந்த பாலமுருகன்(வயது 44) ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூரை கடந்து வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி 30 பயணிகளுடன் ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, காரியாப்பட்டி பஜார் தெருவை சேர்ந்த மாசிலாமணி மகன் பேச்சிமுத்து (32) ஒட்டி வந்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதியது. இதில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த கலைச்செல்வி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மோதிய வேகத்தில் பஸ் நிற்காமல் மைய தடுப்புச்சுவரில் ஏறி சாலையின் குறுக்கே நின்றது. ஆனால் அந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தினால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றினர். பின்னர் விபத்துக்குள்ளான வேன், பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்