ஆம்னி பஸ்கள்-கார் அடுத்தடுத்து மோதல்; சிறுமி உள்பட 2 பேர் பலி

சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்கள்-கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.

Update: 2023-06-29 20:56 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் மீது சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் சாலையில் இருந்து பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தாமல் விபத்து குறித்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் 2 பஸ்கள்

அந்த சமயத்தில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் டிரைவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த உத்திரமொழி (வயது 42) முன்னால் சாலையில் காரும், பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்ததை கண்டார். இதனால் அந்த வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக உத்திரமொழி திடீரென்று பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.

அப்போது, அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ், நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

2 பேர் சாவு

இதில் அந்த பஸ்சின் முன்பக்கம் அமர்ந்திருந்த கிளீனர் திருச்சி மாவட்டம் குருவம்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமியின் மகன் விஜய் (24) பஸ்சின் படிக்கட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்த காஞ்சீபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த பர்கான் (6) என்ற சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் இந்த விபத்தில் சிறுமியின் தாய் சைலானி (33), அண்ணன் முகமது பஷீர் (9), மேலும் அந்த ஆம்னி பஸ் டிரைவரான சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த முருகன் உள்பட இரண்டு ஆம்னி பஸ்களிலும் இருந்தவர்கள் என 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்