ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை எந்த சூழ்நிலையிலும் தலைமைச் செயலகம் ஆகாது -அமைச்சர் பேட்டி
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை எந்த சூழ்நிலையிலும் தலைமைச் செயலகமாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், ரூ.12.66 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அவை ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. எந்திரம் மற்றும் ரூ.3.94 கோடி மதிப்பீட்டில் குடல், இரைப்பை உள்நோக்கி (எண்டோஸ்கோபி) கருவி ஆகும்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ஆஸ்பத்திரியாகவே இயங்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பிறகு தான் இந்த மருத்துவமனையை (கிண்டி சிறப்பு மருத்துவமனை) கட்டத் தொடங்கினார்கள். அது மட்டும் அல்ல, பன்னோக்கு மருத்துவமனை என்று பெயர் மட்டுமே இருந்ததே தவிர பல சிறப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது.
தலைமைச் செயலகமாக மாறாது
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் 34 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய்க்கான அதிநவீன கருவி (ரோபோட்டிக் கேன்சர் எக்கியூப்மென்ட்), கருவுற்ற ஒருசில வாரங்களிலேயே கருவில் இருக்கும் குறைத்தன்மையை கண்டறியும் ஆய்வகமும் திறக்கப்பட்டது. இந்த 2 விஷயங்களும் இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கக்கூடிய பயன்பாடுகள்.
மேலும் இருதய சிகிச்சை அதிக அளவில் நடைபெறும் மருத்துவமனையாகவும், இந்த ஓர் ஆண்டில் மட்டும் 7 உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை திகழ்கிறது. எனவே, எந்த சூழ்நிலையிலும் ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது.
அ.தி.மு.க. செயலாளர் நிலம்
மேலும், 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டதில், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குடிநீர் வசதி சுத்தமாக கிடையாது. எங்களுக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் பக்கத்தில் அ.தி.மு.க. செயலாளர் ஒருவரின் நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்காக நாகப்பட்டினத்தில் தண்ணீர் வசதி இல்லாத இடத்தில் மருத்துவமனையை கட்டிவிட்டு, அந்த கல்லூரியை சீக்கிரம் திறக்க வேண்டும் என்று தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ரா.சாந்திமலர், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பார்த்தசாரதி, கதிரியல் துறை டாக்டர் ராகவி, குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் டாக்டர் ராம்குமார் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.