அரசு பள்ளி வளாகத்தில் தூக்கில் தொங்கிய முதியவர்

தா.பழூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியவாறு முதியவர் ஒருவர் கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-10 18:54 GMT

அரசு பள்ளி வளாகம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள புடையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நேரு (வயது 60). இவர் ஆற்றுப்படுகைகளில் உள்ள சம்பு குச்சிகளை அறுவடை செய்து வாணவெடி தயாரிக்க பயன்படுத்தும் குச்சியாக விற்பனை செய்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி பரிமளா இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதையடுத்து காசியம்மாள் என்பவரை நேரு 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் நெய்வேலி பெரியாக்குறிச்சியை சேர்ந்த ராதா என்பவருடன் சேர்ந்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இரவில் தங்கி கொண்டு பகல் நேரத்தில் ஆற்றுப்படுகையில் உள்ள சம்பு குச்சிகளை நேரு அறுவடை செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.

அடித்துக்கொலையா?

நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் நேரு தனது வேட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தா.பழூர் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து நேருவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில், நேருவின் மகன் பாபு தனது தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில் நேருவின் நெற்றியில் வீக்கம் உள்ளதாகவும், இடது முழங்கையில் சிராய்பு காயம் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, நேரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்