வேதாரண்யம் அருகே, கொள்ளை வழக்கில் கைதான முதியவர்:திருடிய பணத்தில் வீடுகள் கட்டி உல்லாச வாழ்க்கை நடத்தியது அம்பலம்
வேதாரண்யம் அருகே கொள்ளை வழக்கில் கைதான முதியவர் திருடிய பணத்தில் வீடுகள் கட்டி உல்லாசமாக வாழ்க்கை நடத்தியது அம்பலமாகி உள்ளது.
வேதாரண்யம் அருகே கொள்ளை வழக்கில் கைதான முதியவர் திருடிய பணத்தில் வீடுகள் கட்டி உல்லாசமாக வாழ்க்கை நடத்தியது அம்பலமாகி உள்ளது.
முதியவர் கைது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் 108 ஆம்புலன்சில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தம்பிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6-ந் தேதி பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு திருமணத்துக்கு உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து அழைப்பதற்காக வெளியூருக்கு சென்றிருந்தனர்.
அன்று இரவு வீடு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 8 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பகுதியை சேர்ந்த தங்கமுத்து(வயது 77) என்பவர் பிரகாசின் வீட்டில் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரத்தை கைப்பற்றியதுடன் இதுபோல் வேறு எங்கேயாவது தங்கமுத்து கைவரிசை காட்டி உள்ளாரா? என்று விசாரணை நடத்தினர். இதில் தங்கமுத்து மீது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என பல்வேறு மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் பல்வேறு வழக்குகளில் கைதாகி 250-க்கும் மேற்பட்ட முறை அவர் சிறை சென்று வந்ததும் தெரிய வந்தது.
திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை
திருடிய பணத்தில் வீடு கட்டுவது, வணிக வளாகம் கட்டுவது என தங்கமுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தங்கமுத்துவுக்கு உடன்குடியில் ஒரு மாடி வீடு, தேனியில் மாடி வீடு மற்றும் வணிக வளாகம் உள்ளதாகவும், காரைக்காலில் 2 சகோதரிகளுக்கு மாடி வீடு கட்டிக் கொடுத்து உள்ளதாகவும் போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட தங்கமுத்துவை போலீசார், வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர்.