காட்டுயானை தாக்கி முதியவர் பலி
காரமடை அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார்.
காரமடை
காரமடை அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார்.
முதியவர்
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மருதன்(வயது 65). இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் மருதன் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் தனது கால்நடைகளை அருகில் உள் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட்டார். பின்னர் மாலையில் அங்கிருந்து அழைத்து வர சென்றார்.
காட்டுயானை தாக்கியது
அப்போது புதர் மறைவில் நின்றிருந்த காட்டுயானை ஒன்று திடீரென அவரை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருதன், உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தார். எனினும் சிறிது தூரத்திலேயே கால் தவறி கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் துரத்தி வந்த காட்டுயானை அவரை மிதித்து தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மருதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று, அவரது உடலை மீட்க முயன்றனர். ஆனால் காட்டுயானை அங்கேயே நின்றதால், அந்த பணி கைவிடப்பட்டது.
இதையடுத்து நேற்று காலையில் காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் மருதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.