கண்டமனூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

கண்டமனூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.

Update: 2023-02-10 19:30 GMT

கண்டமனூர் புதுகாலனியை சேர்ந்தவர் சின்னமுனியாண்டி. இவரது மனைவி சித்ராயி (வயது 70). நேற்று இவர், தேனிக்கு செல்வதற்காக கண்டமனூர் வடக்குத்தெரு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். பேருந்து நிறுத்தம் அருகே அவர் செல்வதற்குள் அங்கு வந்த தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது.

இதனை பார்த்த சித்ராயி வேகமாக சென்று பஸ்சில் ஏறுவதற்காக ஓடினார். பஸ்சின் முன்புறம் செல்லும்போது மூதாட்டியை கவனிக்காத டிரைவர் பஸ்சை இயக்க தொடங்கினார். அப்போது மூதாட்டி மீது பஸ் மோதியது. மேலும் கீழே விழுந்த மூதாட்டி மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதுடன், சிறிது தூரம் அவர் இழுத்து செல்லப்பட்டார்.

இதில், சம்பவ இடத்திலேயே சித்ராயி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கண்டமனூர் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான உப்புக்கோட்டையை சேர்ந்த ராம்மோகனை (32) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்