கொள்ளையர்கள் தாக்கிய மூதாட்டி ஆஸ்பத்திரியில் சாவு

வாடகைக்கு வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்ற கொள்ளையர்கள் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.

Update: 2022-11-07 19:30 GMT

கன்னங்குறிச்சி:-

வாடகைக்கு வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்ற கொள்ளையர்கள் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.

வாடகைக்கு வீடு

சேலம் சின்னத்திருப்பதி பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் நசீர் ஜஹான் (வயது 82). இவருடைய கணவர் ஹபீஸ்கான், நெடுஞ்சாலை துறையில் மண்டல பொறியாளராக பணியாற்றி இறந்து விட்டார். கடந்த 10 ஆண்டுகளாக சின்னதிருப்பதியில் அடுக்குமாடி குடியிருப்பில் நசீர் ஜஹான் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

கடந்த 4-ந் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க 2 பேர், வீடு வாடகைக்கு கேட்டு நசீர்ஜஹான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் தனியாக இருந்த நசீர்ஜஹானிடம், வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

நகை பறிப்பு

இருந்தாலும் நசீர்ஜஹான் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என நோட்டமிட்டுள்ளனர். அப்போது அவர், தனியாக இருந்ததை மர்மநபர்கள் 2 பேரும் உறுதி செய்தனர். அன்று மாலை 3 மணி அளவில் நசீர்ஜஹான் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அவரை தாக்கி அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி, வளையல், கம்மல், மோதிரம் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதால் காயம் அடைந்த நசீர்ஜஹான் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த நசீர்ஜஹானை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

2 பேர் கைது

இதற்கிடையே கொள்ளை போன நகைகள் 15½ பவுன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

மேலும் இதுபோன்று ஆட்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர்களது விவரங்களை போலீசார் சேகரித்தனர். சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த முஸ்தபா (27), அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (28) ஆகியோராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டியை தாக்கி நகை பறித்தது முஸ்தபா, ராஜேந்திரன் எனபது தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதற்கிடையே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த நசீர்ஜஹான் நிலை கவலைக்கிடமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் நசீர்ஜஹான் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து வந்தனர். நசீர் ஜஹான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

கொலை வழக்காக மாற்றம்

கொள்ளையர்கள் தாக்கியதில் நசீர் ஜஹான் இறந்ததை தொடர்ந்து கொள்ளை வழக்கை கன்னங்குறிச்சி போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். நகைகள் பறிப்பு சம்பவத்தால் தாக்கப்பட்ட மூதாட்டி இறந்த சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-------

(பாக்ஸ்)பீதியில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

மூதாட்டியை தாக்கி வழிப்பறி நடந்த இடம் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகும். அதுவும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து இந்த கொடூர செயலை அரங்கேற்றி இருப்பது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இதனால் பீதி அடைந்துள்ளனர். கைதான 2 பேரும், ஏற்கனவே வீடுகளில் தனியாக இருக்கும் நபர்களை தாக்கி கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான 2 பேர் மீதும் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்