பழையார் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக பழையார் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

Update: 2022-12-18 18:45 GMT

கொள்ளிடம்:

கடல் சீற்றம் காரணமாக பழையார் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையார் மீன்பிடி துறைமுகத்தில் 350 விசை படகுகள், 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாகவும், மீன்பிடி துறையின் அறிவுறுத்தலின் பேரிலும் நேற்று 5000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

படகுகள் நிறுத்தி வைப்பு

இதனால் பழையார் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலைக்கு செல்லவில்லை. இதேபோல் கொடியம்பாளையம், மடவாமேடு, கொட்டாய்மேடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்