கோவையில் ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க கோரி கோவையில் ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடகைக்கு வாகனங்கள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2023-10-17 19:00 GMT

கோவை

சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க கோரி கோவையில் ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடகைக்கு வாகனங்கள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

வேலை நிறுத்தம்

பைக் டாக்சிகளை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும், சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும், ஆன்லைன் அபராதங்களை கைவிட வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர், போர்ட்டர் போன்ற (செல்போன்-ஆப்) வாயிலாக இயக்கப்படும் ஆட்டோ, கார் வாடகை டிரைவர்கள் 3 நாட்கள் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி கோவையில் அனைத்து வகை ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழ்நாடு-புதுச்சேரி உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு பொது வேலை நிறுத்தம் மற்றும் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிரைவா்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீஹரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுடர்வேந்தன், துணை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலைவகித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- 2019 மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் திருத்தங்களோடு அமல்படுத்த வேண்டும். வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதத்தை உடனே கைவிடவேண்டும். ஓலா, ஊபர், போர்ட்டர், ரெட் டாக்சி, பாஸ்ட் டிராக் போன்ற செயலி வாயிலாக இயங்கும் நிறுவனங்களை முறைப்படுத்திட வேண்டும்.

வெளியிட வேண்டும்

ஆட்டோக்களை போன்று கால் டாக்சிகளுக்கும் தற்போது உள்ள பெட்ரோல், டீசல் விலைகளின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றிட வேண்டும். கால் டாக்சி செயல்பாட்டிற்கு தமிழக அரசு புதிய செயலியை உருவாக்க வேண்டும். வணிக வாகனம் இயக்குவதற்கு பேட்ஜ் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் இல்லை என்ற உத்தரவை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இன்று (நேற்று) பொதுவேலை நிறுத்தம் மற்றும் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 500 வாகனங்களை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். சென்னையில் நாளை (இன்று) போராட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்