எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் கழிவு அகற்றம்
எண்ணெய் கசிவு அவசர மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
எண்ணூர் கிரீக் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு அவசர மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா ஷாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எண்ணுர் கிரீக் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக நடந்த அவசர மீட்பு பணிகள் இன்று நிறைவடைந்தது. இந்த பணி 5 பிரிவுகளாக நடைபெற்றது.
அதன்படி, கிரீக் நுழைவு வாயில் பகுதியில் இருந்து எண்ணூர் பாலம் வரை 1.5 கிலோ மீட்டர் நீளத்திற்கும், எண்ணூர் பாலத்தில் இருந்து ரெயில்வே மேம்பாலம் வரை 350 மீட்டர் நீளத்திற்கும், ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து பக்கிங்காம் கால்வாயின் நுழைவுப் பகுதி வரை 1 கிலோ மீட்டர் நீளத்திற்கும், சிவன்படை வீடு முதல் சத்தியமூர்த்தி நகர் வரை 6 கிலோ மீட்டர் நீளத்திற்கும், பக்கிங்காம் கால்வாய் நுழைவுப் பகுதியில் இருந்து சிவன்படை வீடு வரை 100 மீட்டர் நீளத்திற்கும் வெவேறு முகமைகள் கடலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த முகமைகளை சார்ந்த 900 பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இந்த பணியை முடித்து உள்ளனர். இந்த மொத்த பணியையும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான எண்ணெய் கசடு மாநில மேலண்மை குழு கண்காணித்தது. அதன்படி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா ஷாகு தலைமையிலான அணியினர் களப்பணியில் இந்த முகமை பணியாளர்களின் பணிகளை கண்காணித்தார்.
இந்த அணியினர் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் கிரீக் பகுதி ஆகிய இடங்களுக்கு படகில் சென்று அங்கு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தனர். பெரும்பாலான இடங்களில் எண்ணெய் நீக்கும் பணி நிறைவுற்று இருந்தாலும், அங்கு இருக்கும் மாங்குரோவ் பகுதிகளில் படிந்துள்ள எண்ணெயை நீக்குவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.
ஏனென்றால், அங்கு சிறப்புப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதால் அதனை கவனமுடன் செய்ய வேண்டியது உள்ளது. இதற்காக நிபுணர் குழுவுடன் ஆலோசித்து அதற்கான பணிகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் மீனவர்களை நியமித்து சிறிய படகுகள் மூலம் இந்த பணிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறையானது எண்ணூர் மாங்குரோவ் மீட்பு திட்டத்தை செயல்படுத்தும். வெளி இடங்களில் இருந்து வரும் பறவைகள் தங்கும் இடங்களையும் இந்த அணியினர் ஆய்வு செய்தனர்.
அந்த பறவைகள் மீது எண்ணெய் படிவு இருக்கிறதா? என்பதையும் அணியினர் ஆய்வு செய்தனர். நீர்க்கோழிகள் உள்பட தேவைப்படும் பறவைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கான பணிகளை 4 மீட்புக் குழு நாளை முதல் மேற்கொள்ளும்.
நேற்றுடன் நிறைவடைந்த அவசர மீட்பு பணியில் 128 படகுகள், 7 ஜே.சி.பி. எந்திரங்கள் உள்பட பல்வேறு நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதுவரை எண்ணெய் கலந்த நீர் 105.82 கிலோ லிட்டரும், 393.5 டன் எண்ணெய் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில், சி்.பி.சி.எல். நிறுவனம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தலா 3 ஆம்புலன்ஸ் மற்றும் சிறப்பு டாக்டர்கள் குழு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.