பேனர்களால் விபத்து ஏற்பட்டால் அனுமதி வழங்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் - தி.மலை கலெக்டர் எச்சரிக்கை

பேனர்களால் விபத்து ஏற்பட்டால் அனுமதி வழங்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று திருவண்ணாமலை கலெக்டர் எச்சரித்துள்ளார்.;

Update: 2022-10-03 09:39 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் சாலை ஓரங்களில் அனுமதி பெற்று நீண்ட நாட்களாக பேனர் வைக்கப்பட்டு வருவதும் அனுமதி பெறாமல் அவ்வப்போது பேனர்கள் வைக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையினர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை நகரம் என்பது ஆன்மீக நகரம். இந்த நகரத்துக்கு தினமும் பல மாவட்டங்கள், பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவதால் நகரை அழகுபடுத்தும் நோக்கில் நாம் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம்.

இந்த பேனர்கள் நகரின் அழகை கெடுக்கும் வகையாக அமைந்துள்ளது. அனுமதி பெற்று பல நாட்களாக பல வாரங்களாக பேனர்கள் வைக்கப்படுவதும் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்படுவதும் திருவண்ணாமலை நகரப் பகுதிகள் மற்றும் புறநகரப் பகுதிகளில் வாடிக்கையாக உள்ளது.

ஆகவே, பேனர்களை முறையாக வைப்பது குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களை அந்தக்குழு அகற்றும். மேலும் பேனர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால் அந்தக் குழு முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படும். அந்தக்குழுவில் உள்ள அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்