மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுகிறதா என்று மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன 26 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-07-08 18:27 GMT


ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுகிறதா என்று மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன 26 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

கோவையில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று உக்கடம் லாரிப்பேட்டையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் 3 குழுக்களாக பிரிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரசாயன பொருட்கள்

இந்த ஆய்வின்போது கடைகளில் உள்ள மீன்களில் ரசாயன பொருட்கள் கலந்து உள்ளதா?, கெட்டுப்போன மீன் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 15-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த சந்தையில் உள்ள மீன் கடைகளில் உள்ள மீன்களில் நவீன கிட் உதவியுடன் ரசாயனம் பொருட்கள் கலக்கப்படுகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. அதில் எந்த மீன்களிலும் ரசாயன பொருட்கள் கலக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

26 கிலோ பறிமுதல்

மேலும் சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த 26 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த மீன்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும். ரசாயன பொருட்கள் கலந்தோ அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்ததால் தாராளமாக புகார் செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்