ராமநாதபுரத்தில் பி.எப்.ஐ அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல்
ராமநாதபுரத்தில் பி.எப்.ஐ அமைப்பின் மாவட்ட அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்ற பல்வேறு புகார்கள் அந்த அமைப்பின் மீது எழுந்தது.
இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனால் பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை கடந்த 29-ம் தேதி வெளியிட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவர கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட அலுவலகத்திற்கு வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர். இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.