இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை

பெரியகுளம் பகுதியில், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Update: 2023-01-12 16:18 GMT

பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராகவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன், ஆண்டிப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஆகியோரை கொண்ட குழுவினர் அங்குள்ள இறைச்சி கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள கடைகளில் போதிய பராமரிப்பு இன்றி குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்த 75 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ மிக்சர் மற்றும் உணவுப் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி மீது பினாயில் ஊற்றப்பட்டு குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன் கூறுகையில், குளிர்சாதன பெட்டிகளில் சரியான சீதோஷ்ண நிலையில் வைத்து இறைச்சியை 5 கடைகளில் பராமரிக்கவில்லை. மேலும் கடைகளை தூய்மைப்படுத்தி, வெள்ளையடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனை மேம்படுத்துவதற்காக அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 14 நாட்களுக்குள் மேம்படுத்த தவறும் பட்சத்தில் அந்த கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்