ஓமலூர் பகுதியில் வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஓமலூர் பகுதியில் வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், நாலுகால் பாலம், டேனிஷ்பேட்டை, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அவ்வாறு வெல்லம் தயாரிக்கும்போது, செயற்கை நிறமூட்டிகளை கொண்டும், சர்க்கரை கலந்தும் வெல்லம் தயாரிக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஓமலூர், காமலாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஒருசில ஆலைகளில் கலப்படம் கலந்து வெல்லம் தயாரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கலப்படம் செய்து வெல்லம் தயாரித்தால் சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.