துரித உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
சோளிங்கரில் துரித உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி 10 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
'சவர்மா' சாப்பிட்டு மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சோளிங்கர் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது துரித உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த நான்கு கடைகளில் இருந்து 10 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோன்று அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த நான்கு கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர். 8 கிலோ பிளாஸ்டிக் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.