சதுப்பேரி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்து சதுப்பேரி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-09-09 18:41 GMT

நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்திலும் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காவல்துறை சார்பிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள். மேலும் விநாயகர் கோவில்களிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டும் விமரிசையாக கொண்டாடப்படும்.

இதையடுத்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும் நிகழ்வு முக்கியமாகும்.

அதன்படி வேலூரில் வைக்கப்படும் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட உள்ளது. அங்கு செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக நேற்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் போலீசாரும், மாநகராட்சி சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளும், தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய்த்துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் இந்து முன்னணி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

ஆய்வில் சிலைகள் கரைக்கப்பட வேண்டிய இடத்தை தூர்வாருவது குறித்தும், அங்கு தண்ணீர் நிரப்புவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிலைகள் வரும் பாதை, வெளியே செல்லும் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டன. சிலைகள் கரைப்பதற்காக அங்கு பாதை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்