ஈரோடு மாவட்டத்தில் 38 ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு 34 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் 38 ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில் 34 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோட்டில் உள்ள ஒட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் 34 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரடி ஆய்வு
நாமக்கல்லில் 'சவர்மா', தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி கலையரசி உயிரிழந்தார். மேலும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ஈரோட்டில்உள்ள ஓட்டல்களில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்கவிக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை அதிகாரிகள் எடுத்து பார்வையிட்டனர். அதில் நேற்று மீதமான சமைக்கப்படாத கோழி, ஆடு, மீன் இறைச்சிகள் 'பிரீசரில்' வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இறைச்சிகளை எடுத்து அதிகாரிகள் பார்வையிட்டபோது, அது கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது.
அழித்தனர்
இதைத்தொடர்ந்து அதில் இருந்த மசாலா தடவிய மீன், இறால், கோழி போன்ற இறைச்சி உணவுகளை குப்பை தொட்டியில் கொட்டி 'சோப் ஆயில்' ஊற்றி அதிகாரிகள் அழித்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்கவிக்னேஷ் கூறியதாவது:-
ஈரோட்டில் உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் 27 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, 3 ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், 3 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.