மக்கள் பிரச்சினைகள் குறித்து கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை

மக்கள் பிரச்சினைகள் குறித்து கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினா்.

Update: 2023-03-30 20:25 GMT

நெல்லிக்குப்பம்;

நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடந்தது. இதற்கு நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

புனிதவதி (அ.தி.மு.க.):- நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

ஆனந்தராஜ் (சுயேச்சை):- மக்கள் பிரச்சினைகள் குறித்து அதிகாரியிடம் கேள்வி எழுப்பினால் உரிய பதிலை அவர்கள் அளிப்பதில்லை. (இதே குற்றச்சாட்டை பல்வேறு கவுன்சிலர்களும் தெரிவித்தனர்.)

சத்யா (சுயேச்சை):-நெல்லிக்குப்பம் பகுதியில் கழிவுநீருடன் குடிநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கவிதா கஜேந்திரன் (தே.மு.தி.க.):- நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

பாருக் அலி (சுயேச்சை):- நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி வசூலில் ஈடுபடும் அதிகாரிகள் மக்களை மிரட்டி வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும்.

முத்தமிழன் (தி.மு.க.):-அதிகாரிகளிடம் மன்ற பொருள் குறித்த விவரம் கேட்டால் விசாரணை நடத்தி கூறுகிறோம் என சொல்வது நியாயமா?.

பன்னீர்செல்வம் (பா.ம.க.):- விஸ்வநாதபுரம் பகுதியில் நடந்த ஆற்றுத் திருவிழாவின் போது நகராட்சி மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்றது. இதைதவிர்த்து மற்ற செலவுகளை நான் தான் செய்தேன். ஆனால் நான் செலவு செய்ததற்கு எப்படி மன்ற பொருளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு யார் அனுமதி அளித்தனர்.

ஜெயபிரபா மணிவண்ணன் (தி.மு.க.):- திடீர்குப்பம் பகுதியில் சிறிய பாலம் உடைந்து மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்:- கவுன்சிலர்கள் கூறிய அனைத்தும் கோரிக்கைகளும் விரைவில் சரிசெய்யப்படும் இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்