மல்லசமுத்திரத்தில் சோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மல்லசமுத்திரத்தில் சோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை நடத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரத்தில் சோழீஸ்வரர், செல்லாண்டியம்மன், அழகுராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தேர்த்திருவிழாவை நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு தோ்த்திருவிழாவின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தி பலர் மீது வழக்குகள் பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவை சுமுகமாக நடத்த வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சாமிநாதன், ஆய்வாளர் வடிவுக்கரசி, திருச்செங்கோடு துணை ேபாலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன், தாசில்தார் பச்சமுத்து, மல்லசமுத்திரம் வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் இருதரப்பை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இருதரப்பினரின் கருத்துக்களை வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா கேட்டறிந்தார். பின்னர், ஆனி தேர்த்திருவிழாவை அமைதியான மற்றும் நன்முறையில் அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து நடத்த வேண்டும் என்றும், இரு தரப்பினரும் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக பரபரப்புடன் நடந்து வந்த மல்லசமுத்திரம் கோவில் தேர்த்திருவிழா இந்த ஆண்டு சுமுகமாக நடைபெறும் நிலை உருவாகி உள்ளது.