கடசோலை அரசு பள்ளியில் அதிகாரி ஆய்வு
கோத்தகிரி அருகே கடசோலை அரசு பள்ளியில் அதிகாரி ஆய்வு செய்தார்.;
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தாமரை செல்வி, கோத்தகிரி கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கழிவறை பயன்பாடு, சமையல் கூடம், அங்கன்வாடி மையம், சுற்றுப்புறத் தூய்மை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட ஆயத்த பணிகள் குறித்து கேட்டறிந்தார். மாணவர்களின் படித்தல் திறனை பார்வையிட்டு, மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பள்ளியில் தமிழ்நாடு அரசின் திட்டமான வாசிப்பு இயக்கத்தை விரிவுரையாளர் தாமரை செல்வி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த கல்வி சார்பில், வட்டார வள மையம் மூலம் வாசிப்புக்காக பள்ளிக்கு வழங்கிய 268 நூல்களை பார்வையிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளையும் வாசிப்பு இயக்க புத்தகங்களை படிக்க செய்து வாசிப்பின் அவசியம், பயன்கள், வெற்றி குறித்து விரிவாக விளக்கி கூறினார். நூல் மதிப்புரை வழங்கிய 5 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், பரதநாட்டிய ஆசிரியர் சிவராஜ், ஆசிரியர்கள் ராஜேந்திரன், துர்கா, ரஞ்சிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.