கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தொடர்பாக போலீசில் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2023-09-22 20:26 GMT

நிலம் ஆக்கிரமிப்பு

சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஏற்காடு அடிவாரம் 3-வது வார்டு சத்யா நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் மழைநீர் குட்டை உள்ளது. இந்த குட்டை மற்றும் அதனை சார்ந்த நிலத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாகவும், இதனால் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கொண்டப்பநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஊராட்சி தலைவர் சாமிநாதன், 3-வது வார்டு கவுன்சிலர் சுலோச்சனா சுசீந்திரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் நேற்று சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.

பின்னர் அவர்கள் குட்டையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி இருந்ததால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது எனவும் கூறி அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

அப்போது, அரசுக்கு சொந்தமான இடத்தில் குட்டை இருப்பதாகவும், அதனை மீறி ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் அங்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்களிடம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குட்டை இருப்பதாகவும், அந்த குட்டையில் தண்ணீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அதனை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் மீது கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்