தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளில் அதிகாரிகள் `திடீர்' ஆய்வு 8 குழுக்களாக பிரிந்து உரிமம், பதிவுச்சான்றை சரிபார்த்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 8 குழுக்களாக பிரிந்து உரிமம், பதிவுச்சான்றை சரிபார்த்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 8 குழுக்களாக பிரிந்து உரிமம், பதிவுச்சான்றை சரிபார்த்தனர்.
கள ஆய்வு
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தல் ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையாளரால் நியமிக்கப்படும் பணியாளர்களை கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை கள ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
538 படகுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாரில் 48 விசைப்படகுகள், தருவைகுளத்தில் 226 விசைப்படகுகள், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 264 விசைப்படகுகள் ஆக மொத்தம் 538 விசைப்படகுகள் உள்ளன. இதில் 104 விசைப்படகுகள் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படகுகளில் ஆய்வு செய்வதற்காக கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் காசிநாதபாண்டியன் தலைமையில் உதவி இயக்குனர்கள் தீபா, உமா கலைச்செல்வி, புஷ்ரா ஷப்னம் மற்றும் அலுவலர்கள் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர்.
8 குழுக்கள்
இவர்கள் 8 குழுக்களாக பிரிந்து சென்று வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு குழுவிலும் 2 பேர் இடம்பெற்று இருந்தனர்.
இந்த குழுவினர் படகுகளின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகங்கள், துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள், படகு என்ஜின் திறன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதே போன்று படகின் நீளம், அகலம் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.