பிளஸ்-2 தேர்வின்போது அதிகாரிகள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்
நாளைமறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வின் போது அதிகாரிகள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று கல்வித்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறினார்.
நாகர்கோவில்,
நாளைமறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வின் போது அதிகாரிகள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று கல்வித்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறினார்.
ஆலோசனை
தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பிளஸ்- 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 14-ந் தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் பிளஸ் -1, பிளஸ்- 2 தேர்வுகளை பொறுத்தவரையில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களிலும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 45 மையங்களிலும் நடக்கிறது. இதுதவிர இரண்டு கல்வி மாவட்டத்திலும் தலா ஒன்று வீதம் தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 248 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 22,080 பேரும், பிளஸ்-2 மாணவர்கள் 22,918 பேரும் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலையில் நடந்தது.
கவனமாக நடத்த வேண்டும்
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனர் ஆறுமுகம் கலந்துகொண்டு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 அரசு பொதுதேர்வுகளை மிகவும் கவனமாக நடத்த வேண்டும். தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் 2 பேரும் தேர்வு மையத்திற்கு காலை 7.30 மணிக்குள் வந்துவிடவேண்டும். கேள்வி தாள் வைக்கப்பட்டிருக்கும் பண்டல் பிரிக்கும் வரை அதன் மதிப்பு பல கோடி என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உதவி செய்யக்கூடாது
தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர்கள், துறை அதிகாரிகளுக்கு அதிகாரிகள் தரப்பில் அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஆனால் தவறு செய்தால், யாராலும் காப்பாற்ற முடியாது. இதனால் அனைவரும் கவனமுடன் பணியாற்றவேண்டும். தேர்வு நடக்கும்போது நன்றாக படிக்கும் மாணவர்கள் எந்த விதத்திலும் மதிப்பெண் குறையும் வகையில் நடந்து கொள்ளகூடாது. அதுபோல் படிக்காத மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு உதவி செய்யவும் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகன், மார்த்தாண்டம் கல்வி மாவட்ட அதிகாரி ரவிச்சந்திரன், தனியார் பள்ளிகளின் கல்வி மாவட்ட அதிகாரி ராமச்சந்திரன்நாயர், கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்