மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு மாதிரி முகாமில் அதிகாரி ஆய்வு
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு மாதிரி முகாமில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் ஆய்வு நடத்தினார்.
நெல்லை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக 2 கட்டமாக வழங்கப்பட உள்ளது. நேற்று முன்தினம் முதல் கட்டமாக கிராம ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
முதல் நாளில் 55 ஆயிரத்து 51 விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. நேற்றும் தொடர்ந்து கிராம ஊராட்சிகளில் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்கும் பணி நடந்தது. இந்த முதற்கட்ட சிறப்பு முகாம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான பயோ மெட்ரிக் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்வது குறித்த மாதிரி முகாம் நொச்சிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள மகளிர் மனமகிழ் மன்ற கட்டிடத்தில் நேற்று நடந்தது.
இந்த மாதிரி முகாமை நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருமான செல்வராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விண்ணப்ப பதிவு மையங்களில் மின்சார வசதி, பயோமெட்ரிக் பயன்படுத்துவதற்கான சார்ஜர் வசதி போன்ற வசதிகள் தடை இல்லாமல் கிடைப்பதை பணியாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் அவர்களது பதிவுகளை பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படாமல் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன், கோட்டக்கலால் அலுவலர் இசக்கிபாண்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.