அம்பத்தூரில் உடலில் மின்சாரம் பாய்ச்சி அதிகாரி தற்கொலை
புதிய வீடு வாங்க மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் உடலில் மின்சாரம் பாய்ச்சி தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகர், மணிகண்டன் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமரகுரு (வயது 55). இவருக்கு லலிதா (42) என்ற மனைவியும், குரு சஞ்சனா (18), குரு அவந்திகா (14) என 2 மகள்களும் உள்ளனர்.
முத்துக்குமரகுரு, வங்காள தேசத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு விடுமுறையில் தனது மனைவி, மகள்களை பார்க்க அம்பத்தூர் வந்திருந்தார்.
தற்போது இருக்கும் வீடு மற்றும் நகைகளை விற்றுவிட்டு வேறு இடத்தில் புதிதாக வீடு மற்றும் கார் வாங்கலாம் என தனது மனைவி லலிதாவிடம் முத்துக்குமரகுரு கூறினார்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லலிதா, மகள்களின் படிப்பு மற்றும் திருமண செலவுகள் இருப்பதால் தற்போது வேண்டாம். அதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என கூறினார்.
இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அவரது மனைவி மற்றும் மகள்கள் முத்துக்குமரகுருவிடம் பேசுவதை தவிர்த்து வந்தனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தூங்கிய முத்துக்குமரகுரு, நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி மற்றும் மகள்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமரகுரு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது கைகளில் மின்சார தாமிர வயர்களை சுற்றி அதை மின்இணைப்பில் பொருத்தி இருந்தார்.
புதிய வீடு, கார் வாங்க மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த முத்துக்குமரகுரு, தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் முத்துக்குமரகுரு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.