பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்- வேளாண் உதவி இயக்குனர்

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் சாந்தி அறிவுறுத்தினார்.

Update: 2022-10-15 19:53 GMT

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் சாந்தி அறிவுறுத்தினார்.

தொழில்நுட்ப பயிற்சி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவத்தேவன் கிராமத்தில் பாரம்பரிய மற்றும் புதிய நெல் ரகங்களை சாகுபடி செய்வது தொடர்பான தொழில் நுட்ப பயிற்சி நடந்தது. இதற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முரளி, துணைத் தலைவர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உதவி இயக்குனர் சாந்தி பேசியதாவது:- பாரம்பரிய நெல்- புதிய ரகங்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. இவை சர்க்கரை நோய், புற்றுநோய், வயிற்றுப்புண், நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் திறன் கொண்டது.

பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான மற்றும் விஷமில்லாத உணவாக பயன்படுகிறது. விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயற்கை உரம்

நிகழ்ச்சியில் இயற்கை உழவர் இயக்கத்தின் செயலாளர் முருகையன் பேசும்போது, 'விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் இன்றி பயிர் நன்றாக வளர்ந்து நஞ்சில்லாத மற்றும் தரமான உணவை உற்பத்தி செய்ய முடியும்' என்றார்.

நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா, காட்டுயாணம், கருப்புக் கவுனி, சிவப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, தேங்காய் பூ சம்பா, கந்தசாலா, கிச்சடி சம்பா போன்ற ரகங்களின் பண்புகள், குணாதிசயங்கள் மற்றும் சாகுபடி முறை குறித்தும், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் தமிழழகன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்