பாரம்பரிய முறைப்படி குளத்தின் 'மறுகால் திறப்பு விழா' நடத்திய கிராம மக்கள்

வடமதுரை அருகே கோவில்களில் பூஜை மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்ததனை என பாரம்பரிய முறைப்படி குளத்தின் ‘மறுகால் திறப்பு விழா'வை கிராம மக்கள் நடத்தினர்.

Update: 2022-11-17 15:51 GMT

 5 குளங்களுக்கு தண்ணீர்

வடமதுரை அருகே பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கோம்பையான்பட்டியில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைக்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணைக்குளம் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் பாலன் குளம், கணக்கன்குளம், குரும்பன் குளம், குப்பநாயக்கன் குளம், பெரியகுளம் ஆகிய 5 குளங்களுக்கு சென்றடையும். இந்த குளங்கள் அனைத்தும் நிரம்பியவுடன், அணைக்குளத்தின் மறுகால் பகுதி மண்ணால் அடைத்து மூடப்படும்.

அதன்பிறகு அடுத்த ஆண்டு மீண்டும் குளம் நிரம்பினால் 'கோப் வெட்டுதல்' விழா நடத்தி மறுகால் வழியாக மீண்டும் 5 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

'கோப் வெட்டுதல்' விழா

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக திண்டுக்கல், சிறுமலை பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சந்தானவர்தினி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து அணைக்குளம் நிரம்பியது.

இதனையடுத்து 'கோப் வெட்டுதல்' விழா நேற்று நடந்தது. அதன்படி பாரம்பரிய முறைப்படி கோம்பையான்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, பட்டாசுகள் வெடித்து கிராம மக்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

அதன்பிறகு அணைக்குளத்தின் வாய்க்கால் பாலம், கல்லறைத் தோட்டம் மதகு, நாயக்கன்மேடு மதகு, பெரிய மதகு, கன்னிமார் கோவில், ஆலமரத்து அந்தோனியார் சிலுவை, செங்கடை மதகு ஆகிய இடங்களில் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

மத நல்லிணக்கம்

இதனையடுத்து அணைக்குளத்தில் இருந்து 'கோப் வெட்டி' மறுக்கால் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிராம மக்கள் கரையில் வழிபாடு செய்து, கோம்பையான்பட்டி தேவாலய பங்குத்தந்தைகள் கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு ஊர் பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி தண்ணீரை மறுகால் பாய திறந்து விட்டனர்.

இந்த விழாவில் பொதுப்பணித்துறை திண்டுக்கல் பாசன பிரிவு பணி ஆய்வாளர் பாண்டியராஜ், கோம்பையான்பட்டி பங்குத்தந்தை சேசு ஆரோக்கியம், திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் சிவபிரதாப், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மத நல்லிணக்கத்துடன் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மறுகால் திறப்பு விழாவில் பங்கேற்ற சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்