நாரணாபுரம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை
சிவகாசி-நாரணாபுரம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ள நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகாசி,
சிவகாசி-நாரணாபுரம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ள நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய சாலை
சிவகாசியில் இருந்து நாரணாபுரம் வழியாக மதுரை-நெல்லை 4 வழிச்சாலைக்கு செல்ல ரோடு வசதி உள்ளது. இதனால் இந்த பகுதியில் இயங்கி வரும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளுக்கு மூலப்பொருள் கொண்டு வரும் கனரக வாகனங்களும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. சிவகாசியில் இருந்து ஆர்.ஆர்.நகர் செல்லும் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் முழுவதும் கிராமங்கள்தான். மிகவும் பாதுகாப்பான சாலை என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படி முக்கியத்தும் உள்ள இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிவகாசி 4 முக்கு ரோட்டில் தொடங்கும் ஆக்கிரமிப்பு 2 கிலோ மீட்டர் வரை தொடர்கிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்ல கனரக வாகனங்கள் மிகவும் சிரமப்படுகிறது. குறிப்பாக காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் அதிகளவில் இந்த பகுதியை கனரக வாகனங்கள் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் கடும் நெரிசலுக்கு இடையே இந்த பகுதியை வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
இதுபோன்ற விபத்துக்களை தடுக்க நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிவகாசி-நாரணாபுரம் சாலையை ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள சுமார் 30 அடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில் காலம் கடத்தினால் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் இந்த சாலையில் சில இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.