கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவு கூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி அன்னவாசல், இலுப்பூர், பெருஞ்சுனை, வயலோகம், அம்மாசத்திரம், பொம்மாடிமலை, மேலூர், இரும்பாளி, பசுமலைப்பட்டி, மகுதுப்பட்டி, மாதாகோவில், சாத்தம்பட்டி பகுதிகளில் உள்ள கல்லறை வளாகங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. இதில் மனம் உருகி பிரார்த்தனை திருப்பலி, இறைவார்த்தை வழிபாடு, மறையுரை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பங்குத்தந்தையர்கள் அனைத்து கல்லறைகளையும் புனிதநீர் தெளித்து மந்திரித்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்களது முன்னோர்களின் கல்லறையை மல்லிகை, ரோஜா, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால் அலங்கரித்து அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல் ஆலங்குடி, அரசடிப்பட்டி, கும்மங்குளம், வாழக்கொல்லை, வேங்கிடகுளம், குழவாய்ப்பட்டி, ராசியமங்கலம், பாத்தம்பட்டி, பாத்திமாநகர் ஆகிய கிராமங்களிலும் உள்ள கல்லறைகளில் மறைந்த முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.