கடலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-11-02 18:45 GMT

விருத்தாசலம், 

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு நேற்று காலையில் திரளான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்றனர். பின்னர் அங்கு தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரித்தனர். அதனை தொடர்ந்து ஆலயங்களின் பங்கு தந்தைகள் ரிச்சர்ட்,ேடாமினிக் சாவியோஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்து, கூட்டு திருப்பலி நடத்தினர். இதையடுத்து கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

சிதம்பரம், விருத்தாசலம்

இதேபோல் விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயம் சார்பில் கிறிஸ்தவர்கள், புதுக்குப்பத்தில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர் மாலைகள் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வழிபட்டனர். பின்னர் மாலையில் ஆலய பங்கு தந்தை பால் ராஜ்குமார் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மேலும்  சிறப்பு திருப்பலியும் நடந்தது.

இதேபோல் சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளையொட்டி தங்கள் பகுதியில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு சென்று, தங்களது முன்னோர்களின் கல்லறைகளை அலங்கரித்து, அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்