தேவூர் அருகே கோவில் விழாவில் ஆபாச நடனம்-போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
தேவூர் அருகே கோவில் விழாவில் நடந்த ஆபாச நடனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவூர்:
கோவில் விழா
சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி இரவு நடன நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை பார்க்க பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் திரண்டனர். இந்த நாட்டிய நிகழ்ச்சியில் இளம்பெண்கள், இளைஞர்கள் பங்கேற்று திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினர். இதனை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டு ரசித்தனர்.
ஆபாச நடனம்
இதனிடையே மேடையில் இளம்பெண்கள் அரை குறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாட தொடங்கினர். இதனால் அங்கிருந்த பெண்கள் முகம் சுழித்தபடி, தங்களது குழந்தைகளுடன் வெளியேறினர். நேரம் ஆக ஆக ஆபாசமும் அதிகரித்து கொண்டே சென்றது. மேடையில் நடனம் ஆடிய இளம்பெண்களின், ஆடை குறைய தொடங்கியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவூர் போலீசார், உடனடியாக நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நிகழ்ச்சி நிறைவடைந்ததாக கூறி, அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேடைகளில் ஆபாசம் மற்றும் அரை குறை ஆடையுடன் நடனமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அரங்கேறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.