கீழராஜகுலராமன் கிராமத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு; சாலை மறியல்
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் கிராமத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் கிராமத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணறு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட வி.புதூர், பேயம்பட்டி, ஜெ.ஜெ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கிராமத்தில் அமைந்துள்ள கண்மாய் கரையில் ஆழ்துளை கிணறு அமைத்து, மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட வி.புதூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு பல வருடங்களாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
கடந்த வாரம் அந்த இடத்தில் ஆழ்துளை கிணற்றில் மண் மேவியதால் அதன் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த புதிய ஆழ்துளை கிணறு குறிப்பிட்ட அடிக்கு மேல் அதிக ஆழத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளதால், இங்கிருந்து மற்றொரு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் நிலையில் தங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என கீழராஜகுலராமன் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டம்
இதுகுறித்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆலங்குளம் சாலையில் கோபாலபுரம் விலக்கு எதிரே காலை 7 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால் ஆலங்குளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, சொந்த ஊர் பகுதி மக்களே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அடுத்த ஊர் மக்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் ஆலங்குளம் சாலையில் சுமார் 2 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.