கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாடி தீர்வு காண சமரச கூட்டத்தில் முடிவு
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம் என ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடை
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடை கடந்த 19-ந் தேதி திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் அந்த கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.
இந்தநிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமரச கூட்டம்
இதையடுத்து, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே சமரச கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வணிகர் சங்க கூட்டமைப்பின் சார்பில் பழனியப்பன், ரவி, குணசேகரனும், எதிர்தரப்பு சார்பில் பாண்டியன், அரசு சார்பில் கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாட்ஷா, கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி, மாவட்ட மதுபானக்கூட உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம் என்றும் அதுவரை 15 நாட்களுக்கு டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்றும் முடிவு ெசய்யப்பட்டது. பின்னர் இருதரப்பை சேர்ந்தவர்கள் கையொப்பமிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.