சுடுகாட்டை சுற்றி வேலி அமைக்க எதிர்ப்பு
வேலூர் ஓட்டேரியில் சுடுகாட்டை சுற்றி வேலி அமைக்க ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் ஓட்டேரியில் சுடுகாட்டை சுற்றி வேலி அமைக்க ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலி அமைக்க எதிர்ப்பு
வேலூர் ஓட்டேரி காந்திநகரின் ஒருபகுதியில் 50 சென்ட் நிலம் சுடுகாட்டிற்காக ஓதுக்கப்பட்டுள்ளது. சுடுகாட்டையொட்டி பூந்தோட்டம் நகர் அமைந்துள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்கள் சுடுகாட்டு இடத்தில் ஒருபகுதியை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் காந்திநகர் பொதுமக்கள் சுடுகாட்டை சுற்றிலும் இன்று முள்வேலி அமைக்க முயன்றனர். இதைக்கண்ட பூந்தோட்டம் நகர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காந்திநகர் மற்றும் பூந்தோட்டம்நகர் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் வருவாய்துறையினர் அங்கு சென்று இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேறு பாதை இல்லை
அப்போது காந்திநகர் பொதுமக்கள், எங்களுக்கு சொந்தமான சுடுகாட்டு இடத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், பூந்தோட்டம்நகர் பொதுமக்கள், எங்கள் பகுதிக்கு சென்று வருவதற்கு சுடுகாட்டின் ஓரமாக பாதை உள்ளது என்று கூறியதால் தான் இடம் வாங்கி வீடு கட்டினோம்.
இந்த பாதையை தவிர எங்கள் பகுதிக்கு சென்று வருவதற்கு வேறு பாதை இல்லை. எனவே முள்வேலி அமைக்க கூடாது என்றும் கூறினர்.
இருதரப்பினரின் ஆவணங்களையும் பார்வையிட்டு அந்த வழியாக பாதை உள்ளதா அல்லது இல்லையா என்று உறுதி செய்துவிட்டு வேலி அமைப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று தாசில்தார் கூறினார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.