நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாதநிலை உள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாதநிலை உள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீர்நிலைகள்
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மானாவாரி விவசாயமே பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் பாசன வசதிக்கு கண்மாய்களை நம்பியுள்ள நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் 372 கண்மாய்களும், பஞ்சாயத்து யூனியன்கள் கட்டுப்பாட்டில் 732 கண்மாய்களும் ஆக மொத்தம் 1,104 கண்மாய்கள் உள்ளன.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் உள்ள 1,760 கிராமங்களில் 2,925 ஊருணிகளும் உள்ளன. மேலும் பாசன வசதிக்காக பிளவக்கல், கோல்வார்பட்டி, குல்லூர்சந்தை அணைகளும், பாசனம் மற்றும் குடிநீர் வசதிக்காக ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி, சாஸ்தா கோவில் அணைக்கட்டுகளும் உள்ளன.
ஆக்கிரமிப்பு
வற்றாத ஜீவ நதிகளாக இல்லாவிட்டாலும் பெயரளவிற்காவது கவுசிகமாநதி, அர்ஜுனா நதி, வைப்பாறு, குண்டாறு, கிருதுமால் நதி ஆகிய நதிகளும் உள்ளன.
இந்த நீர்நிலைகளில் கருவேலமர ஆக்கிரமிப்புகள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாக உள்ளன. இது தவிர கண்மாய்களிலும், ஊருணிகளிலும் தனியார் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்புக்கு தப்பவில்லை. இதனால் நீர் நிலைகள் பாசன வசதிக்கும், குடிநீர் தேவைக்கும் முழுமையாக பயன்படாமல் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றங்கள் உத்தரவிட்ட நிலையிலும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையே நீடிக்கிறது.
வலியுறுத்தல்
எனவே கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கருவேல மரங்கள் பொதுஏலத்தின் மூலம் விடப்பட்டு அந்த வருவாயை கொண்டு மாவட்டம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தற்போதும் அதே நடைமுறையை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளில் உள்ள கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.