ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை
ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு சென்னை காமராஜர் சாலை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க காமராஜர் சாலையில், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கே.ஜி.இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, தென் சென்னை பகுதி நிர்வாகி சதீஷ் என்பவர், போலீசார் மூலம் இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களை வளாகத்துக்கு உள்ளே போகச்சொன்னதாக தெரிகிறது.
வாக்குவாதம்
இதனால், கோபம் அடைந்த இளங்கோவன், 'தலைவரை வரவேற்க நாங்கள் சாலையில் நிற்போம். எங்களை எப்படி உள்ளே போக சொல்வீர்கள். இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. சரி இல்லை. என்ன நினைத்துகொண்டு இருக்கிறீர்கள்?' என்று வாய் தகராறில் ஈடுபட்டார். இதை அங்கே இருந்த சிலர் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் வீடியோ எடுத்தவர்களை கடுமையாக திட்டினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜே.சி.டி.பிரபாகர் உடனே அங்கே வந்து 2 தரப்புகளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, 10.30 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு வந்தார். பின்னர், ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தனது ஆதரவாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.