ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம்: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தியவர்கள் டி.டி.வி.தினகரனும், வி.கே.சசிகலாவும் தான் என்று ஜெயக்குமார் கூறினார்.;

Update:2022-12-27 20:41 IST

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தியவர்கள் டி.டி.வி.தினகரனும், வி.கே.சசிகலாவும் தான். அவர், அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து கொண்டு தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம். ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வின் 'பி' டீமாகத் தான் செயல்படுகிறார். அவரது எண்ணம் என்னவென்றால் எக்காலத்திலும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் அமையக்கூடாது என்பது தான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது மாவட்டத்தில் அவர் மகன் மட்டும் வெற்றி பெருகிறார். சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் தோல்வி அடைகின்றன. தனக்கு ஒரு கண் போனால், எதிரிக்கு 2 கண்ணும் போக வேண்டும். தனக்கு உதவாத பாலை கீழே கொட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் தான் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேவையில்லாத விஷயங்களை பேசி எங்கள் பொன்னான நேரத்தை நாங்கள் வீணாக்க விரும்பவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்