ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து செயல்பட வேண்டும் இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தேனியில் பேட்டி அளித்தார்

Update: 2022-07-01 16:25 GMT

தேனி பங்களாமேட்டில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம்  நடந்தது. கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், வேதபுரி சித்பவானந்த ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி ஞானசிவாநந்தர், இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணத்தை கடந்த 28-ந்தேதி திருச்செந்தூரில் தொடங்கினோம். வருகிற 31-ந்தேதி சென்னையில் இந்த பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளோம். இந்துக்களின் பல்வேறு உரிமைகள் பாதிக்கப்படுகிறது. அதை மீட்கவே இந்த பிரசார பயணம் மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சி என்பது இந்துக்களுக்கு விரோதமான ஆட்சி. தமிழகத்தில் 100 ஆண்டுகள், 500 ஆண்டுகள் பழமையான கோவில்களை திட்டமிட்டே இடித்து வருகிறார்கள். ஆனால், சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கண்ணகி கோவிலை பராமரித்து அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளோம். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நல்ல ஆன்மிகவாதிகள். அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்