தமிழ்நாடு அரசின் விருதுகளை பெற்ற அறிஞர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
கனவு இல்லம் திட்டத்தின் கீழ்: தமிழ்நாடு அரசின் விருதுகளை பெற்ற அறிஞர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், 'கனவு இல்லத் திட்டம்' என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதை பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு தமிழ்நாட்டிற்குள் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீட்டு வசதி வாரியத்தில் உயர் வருவாய் குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தத் திட்டத்தின்படி தி.மு.க. ஆதரவு தமிழறிஞர்கள் மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளது. தமிழ்நாடு அரசால் பாரதிதாசன், பாரதியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர்கள் கனவு இல்ல திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ் அறிஞர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. மாநில சுயாட்சி என்று சொல்லிக் கொண்டு, மாநில விருது பெற்றவர்களை ஒதுக்குவது நியாயமற்ற செயல். பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது போன்ற தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் அறிஞர்களிடையே உள்ளது. தமிழ் அறிஞர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.