மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தற்போதுள்ள விலைவாசிக்கேற்ப, அனைத்து நிவாரண உதவிகளையும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update: 2023-12-10 19:11 GMT

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

"மிக்ஜம்" புயல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளித்ததும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததன் காரணமாக தொலைக்காட்சி பெட்டி, மரச்சாமான்கள், மடிக்கணினி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் சேதமடைந்ததும், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டதும், குடிநீர் இல்லாமல் தவித்ததும், இயற்கை உபாதைகளை மேற்கொள்ள முடியாமல் பரிதவித்ததும் அனைவரும் அறிந்த ஒன்று.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தும், தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரு சொட்டுநீர் கூட தேங்காது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்ததும், சென்னையில் 'மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் போய்விட்டது' என்று முதல்-அமைச்சர் கூறியதும் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். இந்த உத்தரவாதம் கொடுக்கப்படவில்லை என்றால், மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு சென்று இருப்பார்கள். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் தி.மு.க. அரசுதான் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மக்களிடையே தி.மு.க. அரசுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.

தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கின்ற நிலையில், அண்மையில் பெய்த அதிகனமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாய விலைக்கடை மூலமாக 6,000 ரூபாய் வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோதே 5,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தைக் கணக்கிடாமல், பாதிப்பினைக் கணக்கிடாமல், வெறும் 1,000 ரூபாய் மட்டும் கூடுதலாக அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 2015 ஆம் ஆண்டிருந்த விலைவாசியுடன் தற்போதுள்ள விலைவாசியை ஒப்பிட்டுப் பார்த்தால், மூன்று மடங்கு விலைவாசி உயர்ந்திருக்கின்றது. இந்த நிலையில், குறைந்தபட்சம் மூன்று மடங்கு, அதாவது 15,000 ரூபாய் வெள்ள நிவாரணமாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. அரசோ வெறும் 6,000 ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது. குறைந்தபட்சம் 15,000 ரூபாய் அறிவிக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், குடும்ப அட்டைகள் இல்லாதவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதேபோன்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் ஏற்பட்டபோது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஏழாண்டுகள் கடந்த நிலையில் தற்போது 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது மிகக் குறைவு. குறைந்தபட்சம் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

சேதமடைந்த குடிசைகளுக்கு 8,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு தானே புயல் ஏற்பட்டபோதே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5,000 ரூபாய் வழங்கினார். தற்போது 12 ஆண்டுகள் கடந்த நிலையில் வெறும் 3,000 ரூபாய் மட்டும் கூடுதலாக அறிவித்திருப்பது பாதிக்கப்பட்ட மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போதுள்ள விலைவாசியின் அடிப்படையில், குறைந்தபட்சம் 20,000 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நெல் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவிட்டு தற்போது ஹெக்டேருக்கு 17 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஏற்கக்கூடியதல்ல. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதேபோன்று, சேதமடைந்த கட்டுமரங்கள் மற்றும் வலைகளுக்கு 15,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 50,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமையைக் கணக்கில் கொண்டு மும்மடங்கு உயர்த்தி வழங்க வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும், நிவாரண உதவிகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படுவதாக அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாமே மத்திய உள்துறை அமைச்சகத்தின் 11-07-2023 நாளிட்ட ஆணையின்படிதான் அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால், 2011 ஆம் ஆண்டு தானே புயல் ஏற்பட்டபோது, மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறையை கணக்கில் கொள்ளாமல் ன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயர்த்தி வழங்கினார்.

எனவே, பொதுமக்களுடைய எதிர்பார்ப்பின் அடிப்படையில், மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறையைக் கருத்தில் கொள்ளாமல், தற்போதுள்ள விலைவாசிக்கேற்ப, அனைத்து நிவாரண உதவிகளையும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று முதல்-அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்