சத்துணவு ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்-பேரவை கூட்டத்தில் தீர்மானம்
சத்துணவு ஊழியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
சத்துணவு ஊழியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவை கூட்டம்
ஓட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு சத்துணவு சங்க வட்டார பேரவை கூட்டம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வட்ட தலைவர் அகிலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தொடங்கி வைத்தார். வட்டார செயலாளர் ஞானமணி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் வள்ளியம்மாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், துணைத் தலைவர் அன்னம்மாள், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி, ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் கருப்பசாமி, செயலாளர் திருமாலை, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாநில துணை தலைவர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
காலிப்பணியிடங்கள்
கூட்டத்தில், சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், சட்டரீதியான குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை அனைத்து சத்துணவு மையங்களுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.