சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
ராணிப்பேட்டையில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மடியேந்தி நூதன போராட்டம் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். காலை உணவு திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், ஒய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.