சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.

Update: 2023-08-17 18:30 GMT

ரத்த கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கத்தை நேற்று நடத்தினர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ரத்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட இணை செயலாளர் மீனா கோரிக்கைகளை வலியுறுத்தி படிவத்தில் ரத்தத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார். பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும்.

காத்திருக்கும் போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்து சத்துணவு ஊழியர்களை கல்வி தகுதியின் அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து பணியில் சோ்த்திட வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டும், கைரேகை வைத்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ரத்த கையெழுத்து இயக்க படிவத்தை வருகிற 30-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடும், கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை சமூக நல ஆணையர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்