சத்துணவு ஊழியர்கள் நடைபயண ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் நடைபயண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-09 18:08 GMT

தா.பழூர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழகம் முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சமும், சத்துணவு பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரியலூர் மாவட்டம், முழுவதும் உள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் நடைபயண பிரசார ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ராஜவேம்பு தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பேயத்தேவன் சிறப்புரையாற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் இளங்கோவன், அனுசுயா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட இணை செயலாளர்கள் சர்மிளா, எழிலரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பியபடி நடைபயணமாக சென்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து அங்கிருந்து சுத்தமல்லி பிரிவு சாலை வரை ஊர்வலமாக வந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்றனர். முன்னதாக வட்ட இணை செயலாளர் ஆனந்தவல்லி வரவேற்றார். முடிவில் துணைத்தலைவர் ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்