சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் நடந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறையில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ரா.கமலநாதன் அறிக்கை வாசித்தார்.
இதில், மாநில துணைத் தலைவர் ச.மதிவாணன், மாநில துணைத் தலைவர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தீர்மானங்கள்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஜி.பி.எப். திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஓய்வுபெறும் நாளில் உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் வேம்பு நன்றி கூறினார்.