விழுப்புரம் பகுதியில் செல்லப்பிராணியை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் என்று நூதன போஸ்டர்

விழுப்புரம் பகுதியில் செல்லப்பிராணியை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் என்று நூதன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Update: 2023-04-01 18:45 GMT

விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகே உள்ள புருஷானூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் லட்சுமிநாராயணன்- விஜயா தம்பதியினர். இவர்கள் தங்கள் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். அந்த நாய்க்கு சோபியா என்று பெயரிட்டு தங்கள் வீட்டு பிள்ளைப்போல் ஆசை, ஆசையாய் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி முதல் அந்த நாயை திடீரென காணவில்லை. இதனால் அதனை அருகிலுள்ள பல்வேறு கிராமங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும், வளர்ப்பு பிள்ளைபோல் வளர்த்த நாயை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் புருஷானூர், பஞ்சமாதேவி, வாணியம்பாளையம், பண்ருட்டி, விழுப்புரம் என பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் நாயை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக, காணாமல் போன நபரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அந்த நபரின் புகைப்படத்துடன் போலீசார், முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டுவார்கள். காணாமல்போன நபர் மிக முக்கியமானவர் என்றாலோ அல்லது முக்கியமான ஆவணங்கள் காணாமல் போய்விட்டோலோ, கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற விளம்பரத்தையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் விழுப்புரத்தில், வீட்டில் வளர்த்து வந்த நாய் காணாமல்போனதால் அந்த நாயின் படத்துடன் காணவில்லை என்றும், அந்த நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்