பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-26 19:11 GMT

ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கீதா சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், அரசு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கூத்தையன், அரசு அனைத்து ஆய்வக நுட்புனர் சங்கத்தின் மாநில பொருளாளர் முத்து பாரதி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபி, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆனந்த்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கலெக்டரிடம் மனு

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வழிகாட்டி செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அங்கு புதிய நிரந்தர செவிலியா் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும். கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்துவம் வகையில் ஒரு சுகாதார வட்டாரத்திற்கு ஒரு வழிகாட்டி செவிலியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, அதில் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேவையான செவிலியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, அதில் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும். கிராமப்புற மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்தி அவர்களுக்கு தரமான இலவச சிகிச்சை கிடைப்பதற்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 6 செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், சுகாதாரத்துறையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டர் கற்பகத்தை சந்தித்து கோரிக்கைகள் தொடா்பான மனுவினை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்