மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனம் அமைத்து பயன்பெறும் வகையில் நடப்பு நிதியாண்டில் 720 ஏக்கருக்கு ரூ.2 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.2½ கோடி
தற்போதுள்ள சூழ்நிலையில் பாசன நீர் பற்றாக்குறை என்பது விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.மேலும் கூலி ஆட்கள் பற்றாக்குறையும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், நுண்ணீர்ப் பாசன திட்டங்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு மானியத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பயிர் சாகுபடி பரப்பில் 30சதவீதம் முதல் 40சதவீதம் மட்டுமே ஈரமாக்கப்படுவதால் களை வளர்ச்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.நடைமுறையில் உள்ள நீர்ப்பாசன முறைகளை காட்டிலும் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் பாசனம் செய்ய 50 சதவீதம் முதல் 75 சதவீத மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது. பூச்சி, பூஞ்சாணங்களின் தாக்குதல் மிகவும் குறைவாக உள்ளது அறியப்பட்டுள்ளது.
எனவே தற்போது தோட்டக்கலைத் துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மடத்துக்குளம் வட்டாரத்தில் சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்திற்கு 2023-24-ம் நிதியாண்டுக்கு மானியம் வழங்க 720 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்காக ரூ.2.கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகள்
இதன் மூலம் அனைத்து விவசாயிகளும், அனைத்து விதமான பயிர்களுக்கும், குறிப்பாக தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் 2.5 ஏக்கருக்கு 1.2 மீ x 6 மீ அதற்கும் குறைவான இடைவெளியில் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள காய்கறி பயிர்களுக்கு, சிறு குறு விவசாயிகளாக இருந்தால் 2.5 ஏக்கருக்கு அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 855 மானியம் வழங்கப்படுகிறது.
இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530 மானியத் தொகை வழங்கப்படுகிறது.மேலும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.அத்துடன் ஏற்கனவே அரசு மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் 7 ஆண்டுகள் கடந்திருந்தால் தற்போது புதிதாக நுண்ணீர்ப் பாசனம் அமைத்து மானியம் பெற்றுக் கொள்ள முடியும்.
இணையதளம்
இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்குப் புத்தகம், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
அத்துடன் https://tnhortyculture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்து சொட்டுநீர்ப் பாசன விவரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். எனவே நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் இணைந்து தங்கள் வயல்களில் நீர் ஆதார வசதியினை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.